April 11, 2016

தியானம் என்ற தவம்


தியானத்தின் முதிர்ச்சியே தவம். எனவே முதலில் தியானம் செய்யப் பழக வேண்டும். தியானம் என்கிற போது மன ஒருமைப்பாட்டிற்காகவும், மன அமைதிக்காகவும், புத்திக் கூர்மைக்காகவும் மட்டுமே என்றால், பெட்டிக் கடைகளில் கூட புத்தகங்கள் விற்கப்படுகின்றன.  

வாங்கிப் படித்த்து அதில் சொல்லியிருப்பது போல பயிற்சி செய்து வந்தால் ஒரு சில மாதங்களில் தியானம் கை கூடும். ஆனால், ஆன்மிக மேம்பாடு அடைய வேண்டி தியானம் செய்ய வேண்டும் என்றால், அதற்கான விதி முறைகளையும், வழிமுறைகளையும் கடைபித்து முறைப்படி படிப்படியாகவே முன்னேற வேண்டும். அப்போதுதான் தியானத்தில் நிலைத்து அடுத்த நிலைக்கு உயர முடியும். ஏனென்றால் மனதை உலகாய விஷயங்களில் இருந்து பிரித்தெடுத்து உள்முகமாகத் திருப்பினால் மட்டுமே அது ஓடுக்க நிலைக்கு வரும். 

இதற்கு முதற்கண் ஆன்மிக நோக்கும், நம்பிக்கையும் அவசியம். எனவே முதலில் ஆன்மிக விஷயங்களைக் கேட்பது, படிப்பது, அது சம்மந்தமான வேலைகளில் ஈடுபடுவது, அந்த எண்ணம் கொண்டு ஒழுகும் மக்களுடன் கூடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். 

இவ்வாறு செய்வதால் மனம் முதற்கண் உலகாய விஷயங்களில் இருந்து விலகி ஆன்மிக எண்ணங்களில் திளைக்கத் துவங்கும். அப்போது நீங்கள் ஓரளவு தீய எண்ணங்களின் பிடியிலிருந்து விலகி விடுவீர்கள். இனி நீங்கள் உங்கள் ஓய்வு நேரங்களில் முடிந்த அளவு சமுதாயத் தொண்டுகளைச் செய்து வர வேண்டும். துன்பப்படுபவர்களுக்கு உதவும் மனப் பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். 

 முதலில் தீய எண்ணங்களில் இருந்து விலகிய மனமானது இப்போது பேதமற்ற விரிந்த மனநிலைக்கு வந்து விடும். எல்லாம் இறை சொரூபமே என்ற பரந்த மனப்பான்மை வளரும். அடுத்த படியாக உடலை ஆன்மிக சக்தியைப் பெறுமளவிற்கும், அதற்கான பயிற்சிகளைத் தொய்வின்றி செய்யும் அளவிற்கும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். இவை எல்லாமே புறப் பயிற்சிகளே. 

 இதில் ஓரளவே மனம் பரிபாகம் அடைந்திருக்கும். முற்றிலும் சலனமற்ற மனதைப் பெற வேண்டுமெனில் மூச்சைக் கவனித்து,அதைக் கட்டுப்படுத்தப் பழக வேண்டும். அதையும் தாண்டிய நிலையில் ஐம்புலன்களைப் பற்றி அறிந்து கொண்டு, அவற்றால் ஏற்படும் துன்பங்களை உணர்ந்து மனதை புலன் மயக்கத்தில் இருந்து விலக்கி உள்முகமாகத் திருப்ப வேண்டும்

அதாவது புலன்கள் மூலம் நடைபெறும் எல்லா செயல்களையும் உற்று கவனித்து அவற்றில், அளவும், ஒழுங்கு முறையையும் கடைபிடிக்கும் போது அவைகள் மனதின் கட்டுக்குள் வரும். இப்போது மனம் எளிதில் உள்முகமாகத் திரும்பி நிற்க்கும்.இனி நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், மனதை ஒரு குறிப்பிட்ட பொருளின் மீதோ, ஒளியின் மீதோ, உருவத்தின் மீதோ குவித்துப் பழகுவதே. இந்தப் பழக்கம் மேன்மையடையும் போது மனமானது இயல்பாகவே எதுவுமற்ற சூனியத்தில் குவியத் தயாராகி விடும். 

இதுவே தியானம். இப்படிப் படிப்படியாகப் பயிற்சியில் மேன்மையடையாதவர்கள் மனம் மீண்டும் கீழிறங்கி, புலன் வசப்பட்டு மயங்கி நிற்கும். பயிற்சி செய்யுமளவு ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே மனதில் சக்தி நிலைக்கும். மீண்டும் மனோ சக்தியைப் பெற தியானம் செய்ய வேண்டும். 

இதற்குக் காரணம் மனம் புலன் வழிப்போய் சக்தியை விரையம் செய்வதால் ஆகும். ஆன்மிக மேம்பாடு அடைந்தவர்கள் மனம் அவ்வாறான கீழ்நிலைக்கு எளிதில் வராது. ஏனென்றால் முறையான பயிற்சியின் காரணமாகப் பக்குவமடைந்து விடுகிறது. எனவே அங்கு சக்தியானது விரையம் ஆவதே இல்லை. 

 மேலும் மேலும் சேமிக்கப்பட்டு திணிவு அடைகிறது. இனி உங்கள் விடாமுயற்சியின் அளவுக்கு ஏற்ப பலன் விரைவாகக் கிடைக்கும். இதற்கு ஒரு குருவானவர் அவசியம் தேவை.

நன்றி
மௌனத்தின் குரல் 
அய்யா ராம் மனோகர்