August 3, 2017

காவிரிநதியும் ஆடிப்பெருக்கும்-அறிவியல் சார்ந்த இலக்கிய பார்வை


பல நூல்களின் உதவியோடு, பல தரவுகள், பல இடங்களில் பெற்று அனைத்தையும் ஒன்று சேர்த்து மாலையாக உங்கள் முன் இதை வைக்கிறேன்


பொன்னி நதி என்றும் காவிரி தாய் என்றும் எல்லோராலும் வணங்கபடும், அன்னை காவிரி பிறக்கும் இடம், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் ஒன்றான,குடகுமலை பகுதியில் உள்ள பிரம்மகிரி மலையில் தலைக்காவிரி என்ற இடத்தில் நம் தாய் பிறக்கிறாள் .
இவ்வாறு தான் பிறந்து வளர்ந்து, தன் கணவனான சமுத்திரராஜனுடன் சேர விரும்பி, அகண்டகாவிரியாக விரிந்து அதன் மூலம் மக்களை வாழ வைத்து, தன் கணவனான கடலோடு சென்று கலந்து தன் பிறப்பின் இலக்கை நிறைவேற்றுகிறாள்.

காவிரியும் பொன்னியும்

காவிரி அன்னைக்கு பொன்னி நதி என பெயர் வர காரணம், இதன் நீரில் அடங்கியிருந்த தாதுக்களில் தங்கத்தாது சற்று அதிக அளவில் இருந்ததே காரணம். இது குடகுமலையில் தங்க தாது அதிகம் இருந்த வழியாக வரும்போது தன் நீரில் அத்தாதுவை கலந்து கொண்டுவருகிறாள்.


இதை ஆவூர் மூலங்கிழார் என்ற புலவர் கீழ்வரும் பாடல் மூலம் சுட்டுகிறார்

…………………………………குடாஅது
பொன்படு நெடுவரைப் புயல்ஏறு சிலைப்பின்,
பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும்
தண்புனற் படப்பை எம்மூர் ஆங்கண்
                           புறநானூறு-166

மேலும் திருஞான சம்பந்தர் இதையே உறுதி செய்யும் விதமாக பொன்கரை என தேவாரத்தில் சுட்டுகிறார்

இன்குரல்இசை கெழும் யாழ் முரலத் தன் கரம் மருவிய சதுரன் நகர்
---------------- பொன்கரை பொரு பழங்காவிரியின்...’
                                                              -திருஞானசம்பந்தர்.

ஆடிபெருக்கும் விஞ்ஞானமும்


காவிரி அன்னை புதுவெள்ளமாக உருவாகி தமிழ்நாட்டிற்க்குள் வர காரணம் ஆடி மாதம் என்பது முதுவேனில் முடியும் காலமாகும்
ஆரம்பத்தில் சித்திரை மாதம் கிழக்கில் தோன்றிய சூரியன் ஆடிமாதத்தில் வடகிழக்காக சென்று கடக ராசிமண்டலத்தில் இருக்கிறார். இந்த கடக ராசிமண்டலத்தில்  பூசம், புனர்பூசம், ஆயில்யம் என்ற மூன்று நட்சத்திர பிரிவுகள் இருக்கிறது. இந்த ஆடி 18 அன்று பூசம் நட்சத்திரத்தை விட்டு விட்டு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சூரியன் நுழைவார்.இந்த சனி கிரக ஆதிக்கம் நிறைந்த நட்சத்திரமண்டலத்தை விட்டுவிட்டு புதன்கிரக ஆதிக்கமுள்ள நட்சத்திரத்திற்கு சூரியன் வரும் போது பூமியில் ஒருவித காந்தசக்தி அதிர்வு தோன்றும். அது மங்கலகரமான விடயத்திற்கு ஏற்ற அதிர்வாகும்.இதை அறிந்த முன்னோர்கள் பலவிசேசங்களை அந்த மாதத்தில் அமைத்தனர்.

ஆடி18ம் விவசாய நுட்பமும்(வேளாண்மையும்)

இதனால் மேற்குதொடர்ச்சி மலைபகுதியில் மழை பெய்ய தொடங்கி அது காவிரியில் சேர தொடங்கும், இதனால் காவிரியில் புதுவெள்ளம் பொங்கி வர ஏதுவாக இருக்கும்.இதை கண்ட விவசாயிகள் புதுவெள்ள நீரை வரவேற்று தங்கள் உழவுப் பணிகளைத் தொடங்குவர். ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை பெருக்கு என்பார்கள்.

இந்த ஆறு பாயும் கரையோர பகுதிகளில் மக்களின் வேளாண் மற்றும் பாசன பயன்பாட்டிற்காக படித்துறைகள் அமைத்திருப்பார்கள். அந்த படித்துறைகள் 18 படிகள் கொண்டதாக இருக்கும்.அதன் அருகே மதகுகள் கட்டி பாசனத்திற்க்காக தனியாக வழி செய்துவைப்பார்கள் ஆடி மாதம் அன்று அந்த 18 படிகளும் மூழ்கி விடும் அளவுக்கு புது வெள்ளம் கரைபுரண்டு ஓடும்.அப்போது மதகுவழியாக தண்ணீரை பிரித்து நிலத்தின் உள்ளே விட்டு விவசாயம் செய்வார்கள்*. இதன் நன்றிகடனாக காவிரிக்கு ஆடி 18ம் நாள் புது தாலியும்,இவர்கள் இந்த நீரை நம்பி மீண்டும் பிறந்ததால், அவர்கள் வீட்டு பெண்ணுக்கும், மறுதாலி கயிறு வைத்து வணங்குவார்கள்.

எண்ணம் போல் வாழ்வும் காவிரியும்


ஆடி பெருக்கு அன்று திருமணமானவர்கள் மற்றுமின்றி ஆகாதவர்களும் தனக்கு சீக்கிரம் திருமணமாக சிறுமஞ்சள் கயிறு கட்டுகிறார்கள். மேலும் இந்த மாதத்தில் புவியில் ஏற்படும் காந்த ஒத்திசைவு காரணமாகவும், புறபொருள் மற்றும் அகம் சார்ந்து எண்ணி ஒரு செயல் நடைபெறுவதால் சிலருக்கு சீக்கிரமே திருமணம் கைகூடுகிறது.இதற்கு காவிரி அன்னை ஒரு காரணியாக இருந்து எண்ணத்தில் வழிகாட்டுகிறாள்

மக்கள் சங்கம விழா


காவிரியில் புதுவெள்ளம் பொங்கி வரும் பதினெட்டாம் பெருக்கு தினத்தன்று வீடுகளில் பலவகை சித்ரான்னங்கள், பொங்கல், பாயாசம் ஆகியவற்றை செய்து சுவாமிக்கு நிவேதனம் செய்தும், ஊர்களில் குடியிருப்பவர்கள் கட்டுச்சாதம் கட்டிக்கொண்டு போய் காவேரியம்மனைக் கும்பிட்டு அதன் கரையோரத்தில் அமர்ந்து சாதி, மத வேறுபாடுகள் இன்றி அனைவரும் சாப்பிடுவார்கள்.

மேலும் ஆடவர்,பெண்டிர்கள் சிறுவர்கள் காவிரிநதியில் விளையாடி மகிழ்வார்கள் இதை சங்க இலக்கியத்தில் புனல்லாடுதல் என அழைக்கின்றனர்.மேலும் அந்த அன்னைக்கு புது தாலி அணிவித்து அவள் கணவனான சமுத்திர ராஜனோடு சென்று கலக்க அனைவரும் கும்மிபாட்டுகள்,குரவை கூத்துகள் நடத்தி இந்த பதினெட்டாம் நாளை வெகு விமர்சியாக கொண்டாடுவர்.

மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப 
மணிப்பூ ஆடை - அது போர்த்துக் 
கருங்கயல் கண் விழித்து, ஒல்கி, 
நடந்தாய் வாழி காவேரி 
கருங்கயல் கண் விழித்து ஒல்கி 
நடந்த எல்லாம் நின் கணவண்
திருந்து செங்கோல் வளையாமை, 
அறிந்தேன், வாழி காவேரி 25 

பூவார் சோலை மயில் ஆலப் 
புரிந்து குயில்கள் இசைபாடக், 
காமர் மாலை அருகு அசைய 
நடந்தாய் வாழி, காவேரி! 
காமர் மாலை அருகு அசைய, 
நடந்த எல்லாம் நிண் கணவன் 
நாம வேலின் திறம் கண்டே; 
அறிந்தேன் வாழி, காவேரி 26 

வாழி அவன் தண் வளநாடு 
மகவாய், வளர்க்கும் தாய் ஆகி, 
ஊழி உய்க்கும் பேருதவி
ஒழியய் வாழி காவேரி!
                             சிலப்பதிகாரம்

என்று சிலப்பதிகாரத்தில் காவிரி அன்னையை வாழ்த்தி வரவேற்று பாடும் பாடலை நாமும் பாடி அந்த அன்னையை போற்றி இத்தெய்வ தமிழ்திருநாட்டை செல்வவளமாக்கி நம்மை எல்லாம் வாழவைக்கும் அன்னை காவிரியின் புகழ் என்றும் வளர்க என்று இக்கட்டுரையை முடிக்கின்றேன்.

மீண்டும் ஒரு அறிவியல் சார்ந்த இலக்கிய பார்வையோடு சந்திப்போம்

உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு

நன்றி

வாழ்க வளமுடன்

June 19, 2017

பழந்தமிழர் அறிவியல் தொழில்நுட்பம் பாகம்-8

வானூர்தி மற்றும் சமிக்ஞை கோபுரம் (AIRCRAFT AND SIGNAL TOWER) நுட்பத்தை காண்போம்

அதற்கு முன் என் சில முடிவுரைகளை தொடக்கத்திலேயே கூறிவிடுகிறேன்.தமிழராக பிறந்த நாம் இன்று வேற்று மொழியினரால் ஆளபடுகிறோம்.தமிழனுடைய தொன்மை,பண்பாடு,பூர்வ கலைகள்,விஞ்ஞான பார்வை என அனைத்தையும் மறைத்து அதற்கான சான்றுகளை அழித்து அயல்நாட்டின் பண்பாடுகளை சிலர் புகுத்தி வருகின்றனர்.

இதற்கு காரணம் யாருடைய பண்பாடு பின்பற்றபடுகிறதோ அவர்களுடைய ஆளுமை திறன் அதிகரிக்கும்.அவர்கள் ஆட்சியின் கீழ் மக்கள் வளர ஏதுவாக இருக்கும்.ஆனால் தமிழன் பண்பாடு, நாகரீகம் என்பது அழிக்க ஏதுவாக உள்ள ஓலை சுவடிகளிலோ, செப்பேடுகளிலோ,கல்வெட்டிலோ மட்டும் இருப்பது அல்ல எல்லாவற்றையும் தாண்டி அவனுடைய மரபணுவிலே காலம் காலமாக பிரதி எடுக்கப்பட்டு வருகிறது ஆக அதை யாராலும் அழிக்க முடியாது என்பதை கூறிகொள்கிறேன் அது யாருடைய சிந்தனை மூலமாக வெளிவந்து கொண்டே இருக்கும் இது உண்மை.

இதையும் புரிந்து கொண்ட அயல்நாட்டினர் அம்மரபணுகளை சிதைவை ஏற்படுத்தவே மரபணு மாற்றிய உணவுகளை மறைமுகமாக கொடுத்துவருகிறான். ஆனால் தமிழன் தன் தூக்க நிலையிலும் மரபணுவை காப்பற்றும் வழிமுறை அவனுக்கு அந்த இறைநிலை வழங்கியுள்ளது.ஆக அவன் இத்தீய சக்திக்கு எதிராக எப்போதும் இருப்பான் என முடித்து என்னுடைய கட்டுரைக்குள் உங்களை அழைத்து செல்கிறேன் வாருங்கள் தோழர்களே.

AIRCRAFT AND AUTOMATIC AIRCRAFT

அக்காலத்திலே வானத்தில் மிதந்து செல்லும் ஊர்திகளை மிகபெரிய மன்னர்கள் பயன்படுத்தி உள்ளனர்.அதற்கு நிறைய ஆதாரம் இலக்கியங்களில் உள்ளது.

வாடா மாமலர் மாரி பெய்தாங்கு
அமரர்க் கரசன் தமர்வந் தேத்தக்
கோநகர் பிழைத்த கோவலன் தன்னோடு
வானவூர்தி ஏறினள் மாதோ
கானமலர் புரிகுழல் கண்ணகி தானென்
                                  (சிலப்பதிகாரம் மதுரைகாண்டம் கட்டுரை காதையில் எண்:196 - 200 )

சிலப்பதிகாரத்தில் கோவலனோடு கண்ணகியை மேல் உலகம் என கூறும் இடத்திற்க்கு கூட்டி செல்ல அமரர் அரசன் இந்திரன் வானில் உலவும் தேரோடு வந்து இருவரையும் கூட்டி சென்றான் என கூறுகிறது.

ஓதிய பொறி அற்றாய் ஓர் அரும் பொறி புனைவி என்றான்
                  (சீவக சிந்தாமணி நாமகள் இலம்பகம் எண்:233)

பண்தவழ் விரலில் பாவை பொறிவலந் திரிப்பப் பொங்கி
விண்தவழ் மேகம் போழ்ந்து விசும்பிடைப் பிறக்கும்: வெய்ய
புண்தவழ் வேல்கண் பாவை பொறி இடந் திரிப்பத் தோகை
கண்டவர் மருள் வீழ்ந்து கால் குவித் திருக்கும் அன்றே
                       (சீவக சிந்தாமணி நாமகள் இலம்பகம் எண்:239)

துன்பம் இல் பறவை ஊர்தி சேர்த்தினன் துணைவி சேர்ந்தாள்
                        (சீவக சிந்தாமணி நாமகள் இலம்பகம் எண்:273)

எஃகு என விளங்கி வான்கண் எறுகடல் அமிர்தம் அன்னாள்
அஃகிய மதுகை தன்னால் ஆய்மயில் ஊடும் ஆங்கண்
வெஃகிய புகழிவால தன் வென்று வெம்முரசம் ஆர்ப்ப
எஃகு எறி பினையின் மாழ்கி மெம்மறந்து சோர்ந்தாள்
                        (சீவக சிந்தாமணி நாமகள் இலம்பகம் எண்:299)

மேற்கண்ட பாடலில் கதையின் சுருக்கம் கூறுகிறேன்.எதிரியிடம் இருந்து தப்பி செல்ல விரைவாக வானவூர்தி செய் என ஆணையிடுகிறான் அறிவு என்னும் அமைச்சர்.
இவ்வாணை அவனுடைய மன்னர் சச்சந்தன் ஏற்று ஒரு மயிற்பொறி செய்யுமாறு அதற்கான ஆளைப்பணிக்கிறான்.

அவன் உருவாக்கிய மயிற்போன்ற வானூர்தி இயக்கம் எப்படி இருக்கும் என்றால் அதன் பொறியினை வலஞ்சுழி, இடஞ்சுழியாக திருகுவதன் மூலம் அவ்வூர்தி வான் மேகங்களிடையே பறக்கவோ, தரையில் இறங்கவோ செய்ய முடியும்.அந்த ஊர்தி சிறிதும் துன்பம் தராமல் விரைவாக செல்லும் திறன் படைத்தது.போரின் அவசரத்தில் இருந்து தப்பி விசயை என்கிற மன்னனின் மனைவி தவறான பொத்தானை திருகியதால் அது சில தூரம் சென்று ஒரு சுடுகாட்டில் இறங்குகிறது இங்கிருந்துது சீவக சிந்தாமணி கதை பரபரப்பாக செல்கிறது.

நாம் பதிவுக்கு வருவோம் கம்பராமாயனத்தில் வானூர்தி பற்றி குறிப்புகள் காணபடுகின்றன அதில் எட்டு பேர் செல்லும் புட்பக விமானம் திருஞானசம்பந்தர் கூறும் மதிப்புமிக்க இராவணரிடம் இருந்ததாகவும் பின் அது இராமனிடம் சென்றதையும் கூறுகிறார் கம்பர். குறிப்புக்கு கம்பராமயணம் காணவும்.தமிழை வாழ்த்தி தமிழனை முழுக்க தவறாக சித்தரித்து விட்டார்.

புறநானூரில் ஒரு பாடல் உள்ளது. வானூர்தியில் யாரும் இல்லாமல் செல்லும் வகையில் அது உருவாக்கபட்டது குறித்து ஒரு அடி உள்ளது.

……………..வலவன் ஏவ வானவூர்தி
                       (புறநானூறு பாடல் எண்- 27)

வலவன் என்றால் இப்போது கூறும் விமான ஓட்டி(pilot)
இதை ஒரிசா பாலு அய்யா கூறும் போது இந்த அடிக்கு சான்றாக கடல்சார் பயணத்தில் ஆமைகள் மீது மர துண்டுகளை அக்காலங்களில் கட்டி விடுவர் அது மறுகரையான ஈழநாடுவரை எடுத்து செல்கிறது.அங்கு மக்கள் அந்த மரகலங்களை எடுத்து கப்பல் செய்தனர் என கூறுகிறார்.ஆளில்லாமல் பொருளை நாடு விட்டு நாடு அனுப்பியுள்ளோம் அதே போல் ஆளில்லாமல் வானவூர்திகளை அக்காலத்தில் அனுப்பியுள்ளோம் என கூறுகிறார்.

SIGNAL TOWER 

வானவூர்திகள் பற்றி ஆராயும்போது அதற்கு அவர்கள் சிலமரவகைகளை சமிக்ஞை கொடுக்க பயன்படுத்தியுள்ளனர் என கண்டறிந்தேன் ஓர் இடத்தில் இருந்து சென்று இன்னொரு இடத்தில் சேர்ந்தவுடன் மரத்தின் மூலம் தான் வந்து சேர்ந்ததாக தகவல் அனுப்புகிறார்கள்.

மரங்களை சமிக்ஞை கோபுரமாக பயன்படுத்தியுள்ளனர்.இது பற்றி அதிகம் நான் இன்னும் ஆய்வு செய்யவில்லை இருப்பினும் உயர்திரு ஓஷோ அவர்கள் தன்னுடைய HIDDEN MYSTERIES(மறைந்திருக்கும் உண்மைகள்) என்ற புத்தகத்தில் ஒரு குறிப்பு தருகிறார்.அதாவது ஒரு கிராமவாசி தன் கிராமத்தை விடுத்து பணி நிமித்தமாக அடுத்த கிராமத்திற்க்கு சென்றவுடன், தன் மனைவியிடம் பேச, அங்குள்ள ஒரு மரவகையை பயன்படுத்தி தன் கிராமத்தில் உள்ள அதே மரவகையின் மூலம் பேசியுள்ளான் என கூறுகிறார்.இதை ஆய்வு செய்த ஆய்வாளருக்கு கூட தெரியவில்லலை. ஏன், பேசுகிற அவனுக்கே இதை விவரிக்க முடியவில்லை பின் எப்படி என்றால் பாரம்பரியமாக இதை அவன் செய்கிறான்.அதனால் அது முடியும் ஆனால் நம்மால் அதை அறிய முடியாது என கூறுகிறார்.

இது சாத்தியமா என என்னிடம் கேட்டால் நூறு சதவீதம் உண்மை அதற்கு நான் பெரிய புத்தக விளக்கம் தான் கொடுக்க வேண்டும் அது இயல் தமிழ் ,இசைதமிழோடு தொடர்புள்ள ஒரு விடயம் அது பற்றி இன்னும் ஆழமாக நான் ஆய்வு செய்யவில்லை.செய்தவுடன் இறையருள் மூலம் வெளிவரும்.

இதனுடைய மாறுபட்ட வெளிபாடு தான் SIGNAL TOWERS இதுவும் மரமும் ஒரே மாதிரியாக இருப்பதை கவனிக்கவும்.காலத்தின் கோலம் மரம் நடாமல் TOWER ஆக நடுகிறோம் இவை புற கருவி இல்லை என்றால் வேலை செய்யாது என்பதை நினைக்க வேண்டும்

இறுதியாக நான் கூறவருவது தமிழில் ஏராளமான விடயங்கள் உள்ளது. ஆனால், வெளிகொணர ஆட்கள் போதவில்லை. என்னுடைய கட்டுரைகள் உங்களிடம் தூண்டுதல் ஏற்படுத்தி சிந்திக்க வைத்தால் அது தான் என் வெற்றி.மேலும் உங்கள் மரபணுவில் இவைகள் பதிவு செய்யபட்டுள்ளது அதை நான் ஒரு கருவியாக இருந்து நியாபக படுத்தியுள்ளேன்.
                           

உங்கள் சித்தர் அடிமை
இரா.சங்கர்
ஈரோடு

வாழ்க தமிழ்; வளர்க நம் கலைகள்

June 10, 2017

பழந்தமிழர் அறிவியல் தொழில்நுட்பம் பாகம்-7

இன்று நாம் காண்பது கண்ணாடி(GLASS)பற்றியும் அவற்றின் நிழல் பிடிப்பான்(SHADOW PICKER) கலை பற்றியும் மற்றும்  பழந்தமிழர் எவ்வாறு பயன்படுத்தினர் என்பதையும் அறிவோம்.

ஒவ்வொரு பொருளும் மனித வாழ்கையில் இன்றியமையாத ஒன்றாக அவர்கள் கூடவே பயணிக்கிறது.ஆனால் அதை மனிதன் ஒரு நாளும் அதன் தோற்றம் பற்றி சிந்திப்பதே இல்லை.
கண்ணாடி இதை சங்க காலத்தில் தமிழர்கள் இரண்டு விதமாக அதாவது செயற்கை கண்ணாடி இயற்கை கண்ணாடி என கண்டறிந்து பயன்படுத்தினர்.

இயற்கை கண்ணாடி என்பது எரிமலை பிரதேசத்தில் உள்ள பளிங்கு பாறைகளை வெட்டி எடுத்து அவற்றை கண்ணாடியாக பயன்படுத்தினர்.மேலும் செயற்கையாக உவர்மண் அதாவது சலைவசோடா மண் மற்றும் சுண்ணாம்புக்கல் ஆகியவற்றை உருக்கி கண்ணாடி தயாரித்தனர்.


சங்க இலக்கியத்தில் கண்ணாடியின் பெயர் பலவகையில் உள்ளது அவை நிழல்காண் மண்டிலம்,ஆடிபாவை,பாண்டில்,வயங்குமணி,வயங்கல் மற்றும் கண்ணாடி என்றே சில இடங்களில் கூறியுள்ளனர்.

கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப்பாவை போல
மேவன செய்யும் புதல்வன் தாய்க்கே
                         (குறுந்தொகை 8ல் எண் 4-6)

நாம் கண்ணாடி முன் என்ன செய்கிறோமோ அதையே செய்யும் கண்ணாடி தான் ஆடிப்பாவை என்கிறார்கள்.

நீர்உண் பச்சை நிறமறைத்து அடைச்சிய
தோலெறி பாண்டிலின் வாலிய மலர
                     (அகநானூறு217 ல் 7,8 வரி)

அழகு கூட்டுவதற்கு கேடயத்தில் கண்ணாடி பயன்பட்டது 

வயங்குமணி பொருத வகையமை வனப்பு
                       (அகநானூறு 167ல் 1)

ஒளி செய்யும் மணிகள் பலவற்றை வைத்துச் செய்யப்பட்ட கண்ணாடி அகத்தில் உள்ளதை அப்படியே காட்டும். என பாடல்கள் மூலம் அறியலாம். இங்குள்ள எல்லா பாடலும் கண்ணாடி பயன்படுத்தி சான்று தருகிறது.அதோடு இது சூட்சம விசயங்களை அப்படியே மறைத்தும் கூறுகிறது.

கண்ணாடியின் சூட்சமும் நிழல் பிடிப்பான் கலையும்

மேலே கண்ட பாடல்கள் அனைத்தும் ஒவ்வொரு இடத்திலும் கண்ணாடியின் பெயரை புலவர்கள் மாற்றி இருப்பதை கவனிக்கவும்.ஒவ்வொரு இடத்திலும் கண்ணாடி பயன்பட்ட வேறொரு காரணத்தையும் சொல்லாமல் சொல்கிறார்கள் . இதற்கு சித்தர்களின் துணையும் அவசியமாகிறது.

அதற்கு முன் ஒளியை எதிர் ஒலிக்கும் கண்ணாடி எப்படி செய்யபடுகிறது என கண்டு விட்டால் கண்ணாடி செய்யும் வேலையை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

ஈயத்தகட்டின் மீது பாதரசத்தைத் தடவி அத்தகட்டைக் கண்ணாடி மீது ஒட்ட,அப்பாதரசம் கண்ணாடி மேல் பரவி அதன் ஒளி, ஒளி எதிரொளிக்கும் கண்ணாடியாக் நமது கைகளுக்கு கிடைகிறது.

இங்கு பாதரசத்தை வைத்து செய்யபடும் கண்ணாடிகள் மிகவும் முக்கியமானவை.அதாவது பாதரசத்தில் எது சேர்க்கிறோமோ அது அதன் தன்மையை அதிகபடுத்தி கொடுக்கும் ஆற்றல் உண்டு.

நீங்கள் அக்கண்ணாடி முன்பு நின்றால் உங்களுடைய பிராண சக்தி கூடும். உங்களுக்கு வயது ஆகுதல் என்பது உங்களை இந்த பூமியானது வானமண்டலத்தோடு சேர்த்து சுத்துவதால் உங்கள் அணுக்கள் சிதறடிக்கபடுகிறது.உங்கள் பிராண அடுக்கு குலைகிறது அதை தடுக்க கண்ணாடி தடுத்து உங்கள் பிராண வலிமையை கூட்டுகிறது.

நீங்கள் எப்படி இருக்கவேண்டும் என நினைக்கிறீர்களோ அப்படியே கண்ணாடியில் பார்ப்பதால் உடனே உங்கள் செயலின் தன்மையை பாதரசம் அதிகபடுத்தி தருகிறது.ரசமணி அணிவதன் தத்துவமும் இதுதான் குறிபிட்ட மூலிகையில் ரசத்தை ஊற்றி சுத்தி செய்து அதை அணிந்தோ வாயிலிட்டோ பலனை பெறுவர் அதெல்லாம் பெரிய செய்முறை.

நம் பதிவுக்கு வருவோம் ஆண்டாள் எப்போதும் கண்ணாடி முன் தன்னை அழகுபடுத்துவது பற்றியும்,வள்ளலார் கண்ணாடி முன் அமர்ந்து தியானம் செய்வது பற்றியும் கூறும் கதையை நினைவில் கொள்க தெரியவில்லை என்றால் தெரிந்து படித்து பார்க்கவும்.

சங்க காலத்தில் ஒரு கலை இருந்தது நிழல்பிடிப்பான் இது கண்ணாடி மற்றும் பிராண சக்தி மூலம் கற்க வேண்டிய அணுவிஞ்ஞான கலை உங்கள் எதிரியின் நிழல் உங்களிடம் சிக்கினால் நீங்கள் சொல்வதை கேட்டே ஆக வேண்டும் இக்கலைக்கு வேறு பெயர்கள் இருப்பதாக கேள்வியுற்றேன். இதன் மாதிரி விடயம் ஆயிரத்தில் ஒருவன் திரைபடத்தில் உள்ளது நிழல் பிடிப்பான் என யூடுப் வீடியோவில்  காண்க

சங்ககால புலவர்கள் கண்ணாடியை இடத்துக்கு தகுந்தவாறு பெயர் சூட்டுவதை கண்டோம் அல்லவா அதில் ஒரு பெயரை மட்டும் காண்போம்.

ஆடிப்பாவை அதாவது ஆடி முன் உள்ள பாவை அல்லது ஆடியில் உள்ள பாவை இது முன் பின் வரும் சொற்களை கொண்டு அறியபடவேண்டியது.பாவை என்றால் ஆட்கள்.ஆடிமுன் உள்ள பாவை என்ன செய்யவேண்டும் என ஆடியில் காட்டுவது அது எவ்வாறு பலிக்கும் எனில் அந்த கண்ணாடி சுற்றி பதிக்கும் பொருட்களை குறிக்கும்.வாசலில் ஏன் கண்ணாடி வைப்பதும் சூட்சமம்


உங்களிடம் உள்ள கண்ணாடியின் வண்ணம் குறிபிட்ட மாறுதல்கள் செய்யும்.உயர்திரு எம்ஜியார் மற்றும் கருணாநிதி அவர்கள் ஏன் கறுப்பு கண்ணாடி அணிகின்றனர். கண் தெரியவில்லை என்றால் சாதாரணகண்ணாடி அணியலாமே. கவனிக்க கறுப்பு கண்ணாடி திருஷ்டி கோளாறுகளை வடிகட்டும் மேலும் பார்க்கும் கண்ணாடி ஊடுறுவும் தன்மை கொண்டது என்பதை மறக்கவேண்டாம். அதேசமயத்தில் ஒரு சாயலில் எதிர்தாக்குதல் செய்யும் தன்மையுடையது.

இப்போது மேலே உள்ள பாடல்களை படித்தால் கண்ணாடி எப்படி எல்லாம் இடத்திற்க்கு தகுந்தாற்போல் மாற்றியுள்ளனர் என யூகிக்க முடியும்.

காலத்தின் நன்மைகருதி நிழல் பிடிப்பான் கலையை சித்தர்களின் வாயிலாக விட்டுவிடுகிறோம். எனக்கும் இக்கலை பற்றி முழுமையாக தெரியாது என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன் இதை ஒரு தகவல் பகிர்வாக அனைவருக்கும் தருகிறேன்.

நேரம் சரியில்லை என்றால் உன் நிழலே உனக்கு எதிரியாகும் கவனமா இரு என்ற பழமொழி ஒன்று உள்ளது.

உங்கள் சித்தர் அடிமை
இரா.சங்கர்
ஈரோடு


வாழ்க தமிழ் ; வளர்க நம் கலைகள்


June 6, 2017

பழந்தமிழர் அறிவியல் தொழில்நுட்பம் பாகம்-6

இன்றைய பதிவில் மருத்துவ அறுவை சிகிச்சையில்( MEDICAL AND SURGERY OPRATION) நம் பழந்தமிழர்கள் முன்னோடிகள் என அறிவோம்.

ஒவ்வொன்றாக காயத்தை சரிசெய்யும் முறையான கிருமிநாசினி தடவுதல், புண்களை தையல் போடுதல் பின் பஞ்சுவைத்து கட்டுபோடுதல் என வரிசையாக காண்போம்.

ANTISEPTIC CLEAN

பால்கொண்ட அத்தியெனவே உடல்வடுப்பட்ட எமர்
                                  (திருவெங்கைக் கோவை - 99)

ஆயுதங்களால் உண்டான காயங்களிலும் அறுவை சிகிச்சை நடத்த இடத்திலும் உலோக  நஞ்சை  முறிக்கும்   (ANTISEPTIC) மருந்தாகவும்,புண் ஆறிய பின் வடு தோன்றாமல் தோலின் நிறம் பழைய நிலைக்கே மாறவும் அத்திப்பால்  பயன்படுத்தினர்.மேலும் வேம்பு இலையையும் பயன்படுத்தினர் பதிவின் நீளம் கருதி இங்கு கூறவில்லை


WOUNDED STITCHES

மீன்றேர் கொட்பிற் பனிக்கய மூழ்கிச்
சிரல் பெயர்ந் தன்ன நெடுவெள் ளுசி
நெடுவசி பரந்த உடுவாழ் மார்பின்
அம்புசே ருடம்பினர்ச் சேர்ந்தோ ரல்லது

                           (
பதிற்றுப்பத்து 42: 2முதல்5வரை)

இதில் தண்ணீருக்குள் இருக்கிற மீனைக் கொத்தி உண்பதற்காக நீரில் பாய்ந்து, அடுத்த நொடியிலேயே நீரைவிட்டு மேலே பறந்து வருகிற சிரல் பறவையைப் போல,ஒரு பெரிய ஊசி புண்ணுக்குள்ள நுழைந்து வெளியே வருதாம்.அதாவது புண்பட்ட இடத்தில் வெள்ளுசியை கொண்டு தையல் போடும் முறை புலவர் கூறுகிறார்

இதை செய்து முடித்த பின் இப்போது போடபடும் பஞ்சு கட்டு(band-aid) அப்போதே போட்டுள்ளனர் கீழே காணவும்

COTTON DRUG PACK

செருவா யுழக்கி குருதி யோட்டி
கதுவாய் போகிய துதிவா யெஃகமொடு
பஞ்சியும் களையாப் புண்ணர்

                                 (
புறநானூறு-353) 


அதாவது, பஞ்சு வைத்து கட்டிய புண் ஆறும் முன்பே மறுபடியும் போர்க்களத்திற்கு வந்து பஞ்சுக் கட்டுடனேயே வாளேந்தி போர் புரியும் வீரர்கள் வீரத்தை பறை சாற்றுகிறது மேற்கண்ட பாடல்

அடுத்து நாம் காணபோவது உடலை அறுத்து சிகிச்சை செய்த சான்றுகள்


BABY CESERIAN
**********************

கொங்கு மண்டல சதகம் என்ற சிற்றிலக்கியத்தில் காந்தபுரம் என்ற ஒரு பகுதியை ஆண்ட வேந்தனின் மகள் பிள்ளையைப் பெற்றெடுக்க முடியாமல் பிரசவ வேதனையால் துன்பப்படுகிறாள்.
அப்பெண்ணின் *வயிற்றைக் கிழித்துத்* தன் திறமையால் குழந்தையை வெளியில் எடுத்தாளாம் மருத்துவச்சி ஒருவர்.

குறைவறு தெண்ணீர் நதியணை காந்த புரத்தொடுநல்
இறைமகளார் மகவீனப் பொறாது உடல் ஏங்க வகிர்
துறைவழி ஏற்று மகிழ்வூட்டும் அங்கலை தோன்றி வளர்
மறைவழி நேர் நறையூர் நாடுசூழ் கொங்கு மண்டலமே

                                  
கொங்குமண்டல சதகம்


இப்பாடலில் கூறப்பட்டுள்ளவகிர் துறைவழிஎன்பது வயிற்றை வகிர்ந்து ( கிழித்து) குழந்தையை வெளியில் எடுக்கும் மருத்துவமுறையை குறிக்கிறது. ‘துறைஎன்ற சொல் அக்காலத்தில் அறுவை மருத்துவத்துறை பரவலாக இருந்ததைக் காட்டுகிறது.

அறுவை மருத்துவத்துறை என்ற ஒரு துறை அக்காலத்தில் தோன்றி வளர்ந்து இருந்ததையும், ‘அங்கலை தோன்றி வளர் நேர் நறையூர்என்பது அரிய கலையான இம்மருத்துவ முறை, கொங்கு நாட்டின் நறையூரில் வளர்ந்து இருந்தது என்பதையும் குறிக்கிறது.

DEAD BODY RESEARCH
*****************************

செயம் பெறு சிங்கைநாடன் செகராசசேகரன் மா
லுயர்ந்தவாள் வடக்கார முருட்டிய களத்தின் மீதே
அயஞ் சிறிதுளதீர வளந்தளந தறிந்த தாமே
.
                                              
செகராசசேகரம்

அதாவது போர்க்களத்தில் செகராசசேகரனால் (1400களில் இலங்கையை ஆண்ட தமிழ்மன்னன்)
வெட்டிவீழ்த்தப்பட்ட வடக்கு அரசர்களின் உடல்களைக் கீறி, உறுப்புகளை எடுத்து, அளந்து அளந்து ஐயமின்றின் கற்றார்கள் என இப்பாடல் தெளிவாக கூறுகிறது.

இறுதியாக பதிவின் நீளம் கருதி சில இடங்களில் கண்ட செய்திகளை கூறுகிறேன்.

அம்பு சென்று துளைத்த உடலில் அம்பை எடுக்கும்போது அம்பு முனை உள்ளே சிக்கி குச்சி உடைந்துவிடும் அதன் மேல் நெய்தடவி வேறு ஒரு கத்தியையோ, கூர்மையான ஆயுதத்தையோ வைத்து எடுப்பர் என சீவக சிந்தமணி கூறுகிறது.

மேலும் பெரிய புண்கள் ஏற்பட்ட உடலை எலியின் நுண்மையான மயிரினால் நெய்யப்பட்ட ஆடையால் ஆகிய போர்வையை கொண்டு மூடுவர். எலி மயிர்போர்வை மிகுந்த வெப்பத்தை உடையது; குளிரை நீக்கக் கூடியது; அதனுள் காற்றும் புகாது. மென்மை உடையது என்றும் குறிப்பிடப்படுகிறது.


இறந்துபோன தசரதனது உடம்பை,கேகய நாட்டுக்குச்சென்றுள்ள பரத சத்துருக்கனர் வந்து ஈமக்கடன் செய்யும் வரை கெடாமல் இருப்பதற்காகத் தைலத்தில் இட்டு வைத்ததைக் கூறுகிறது ராமாயணம்

இதற்கு அப்புறம் தான், இதே மாதிரி இயேசுவின் உடம்பை தைல காப்பு கொண்டு வைத்தனர் என்பது நினைவுகூறவேண்டிய ஒன்று.

இங்கு பழந்தமிழர்களின் புலவர் மருத்துவ அறிவியல் மட்டுமே பகிரப்பட்டது இன்னும் சித்தர்கள் மருத்துவ முறை விளக்கினால் பதிவு பெரிதாகும் என்பதால் இத்துடன் முடிக்கிறேன்

உங்கள் சித்தர் அடிமை
இரா.சங்கர்
ஈரோடு


வாழ்க தமிழ்;வளர்க நம் கலைகள்